இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே மோதல் நடைபெறுகிறது.

இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் 20 லட்சம் பாலஸ்தீனர்கள் வாழும் காஸாவில் தரைமட்டமாயின. இதில் 65 குழந்தைகள் உள்பட 230-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

ஹமாஸ் படையினர் வீசிய ராக்கெட் வெடிகுண்டுகளால் இரண்டு குழந்தைகள் உள்பட 12 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதில் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் சௌம்யா சந்தோஷ் ராக்கெட் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி பலியானார்.

2014-இல் இஸ்ரேல் ஹமாஸ் இடையே 50 நாள்கள் நடைபெற்ற கடும் சண்டைக்கு பிறகு நடைபெற்ற மோசமான சண்டை இதுவாகும்.

மோதலின் மூலக்காரணம்: கிழக்கு ஜெருசலேம், ஷேக் ஜாரா மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பாலஸ்தீனர்களின் இடங்களை யூதர்கள் உரிமை கொண்டாடி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. இந்நிலையில், பாலஸ்தீனர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முயற்சிகளைக் கண்டித்து அந்தப் பகுதியில் போராட்டங்கள் நடைபெற்று வந்ததால் இஸ்ரேலிய ராணுவம் குவிக்கப்பட்டிருந்தது.

இஸ்லாமியர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான ஜெருசேலம் பழைய நகரத்தில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் இஸ்லாமியர்கள் ரமலான் மாத தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய ரப்பர் வெடிகுண்டு துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் காயமடைந்தனர். இது மோதலை மேலும் அதிகரித்தது. அல்-அக்ஸா மசூதியில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தினர் வெளியேற ஹமாஸ் படையினர் கெடு விதித்தனர். இஸ்ரேலின் பல பகுதிகளில் யூதர்களுக்கும், பாலஸ்தீன அரபிகளுக்கும் மோதல் ஏற்பட்டது.

காஸா பகுதியிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள இஸ்ரேல் தலைநகர் ஜெருசேலம் மீது மே 10-ஆம் தேதி ராக்கெட் வெடிகுண்டுகளை வீசியது ஹமாஸ். இதை சற்றும் எதிர்பாராத இஸ்ரேல் நவீன ரக ஏவுகணைகளை காஸா பகுதியில் வீசி தாக்குதல் நடத்தியது.

ஹமாஸ் உள்பட பிற கிளர்ச்சிக் குழுவினர் நீண்ட தூரம் செல்லும் 4,4360 ராக்கெட் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பெரும்பாலானவற்றை இடைமறி ஏவுகணையான ’அயர்ன் டோம் நடுவானில் தாக்கி அழித்துவிட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. எனினும், சில ராக்கெட் வெடிகுண்டுகள் சுமார் 90 கி.மீ. தூரம் உள்ள டெல் அவிவ், ஜபா, லாட் ஆகிய நகரங்களில் விழுந்து கட்டடங்களுக்கு சேதம் ஏற்படுத்தியது.

உலகிலேயே அதிநவீன போர்த் தளவாடங்களையும், ரேடார் சாதனங்களையும் வைத்திருக்கும் இஸ்ரேல், காஸா பகுதியை சாட்டிலைட் மூலம் துல்லியமாக கண்காணித்தது.

ஹமாஸ் படையினர் ராக்கெட் வெடிகுண்டுகளை ஏவுவதாக சந்தேகிக்கப்படும் மீது எச்சரிக்கை வெடிகுண்டுகளை இஸ்ரேல் வீசியது. இந்த வகை குண்டு வந்து விழுந்ததும் அடுத்த 5 நிமிடங்களில் அங்குள்ள மக்கள் வெளியேறிவிட வேண்டும். பின்னர், அந்த இடத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும்.

காஸா பகுதியில் செயல்பட்டு வந்த ஏஜென்ஸ் ஃபிரான்ஸ் பிரஸ்(ஏஎப்பி), அல் ஜசீரா போன்ற சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வந்த 13 மாடி கட்டடத்தின் மீது ஹமாஸ் பிரிவு தலைவர்கள் இருப்பதாகக் கருதி எச்சரிக்கை குண்டையும், பின்னர் ஏவுகணையை வீசி தரைமட்டமாக்கியது. பத்திரிகையாளர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிரிழப்பு ஏற்படவில்லை.

இதேபோல், ஹமாஸ் படையினர் வீசும் ராக்கெட் வெடிகுண்டு இடைமறி ஏவுகணையிடம் தப்பி இலக்கைத் தாக்குவதற்கு முன்பு எச்சரிக்கை மணியை இஸ்ரேலின் ராணுவ தொழில்நுட்பம் எழுப்பியதன் மூலம் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தப்பினர்.

தலைவர்கள் பலி: ஹமாஸ் படையினரின் அரசியல் பிரிவுத் தலைவர் கலில் அல் ஹயேவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்தது. காஸா நகரச் சாலைகளுக்கு அடியில் சுரங்கப் பாதைகளை அமைத்து ராணுவத் தளவாடங்களை அதன் வழியாக கொண்டு சென்று ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் கண்டுபிடித்தது.

வான்வழி தாக்குதல் மூலம் அந்தச் சாலைகளில் குண்டுகளை வீசி சுரங்கப் பாதைகளையும், பதுங்கு குழிகளையும் இஸ்ரேல் அழித்தது. இதில் ஹமாஸ் படையினரின் 30 கமாண்டர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் முக்கிய ஆயுதக் கிடங்குகள் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவத்தினர் தெரிவித்தனர்.

இஸ்ரேல்-காஸா சண்டை மோதலுடன் முடிவடைந்து விடவில்லை. அருகருகே வாழ்விடங்களைக் கொண்ட பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் இடையே மீண்டும் சிறு மோதல் ஏற்பட்டாலும், அது ஆயுதப் போராக எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும். இதைத் தடுக்க ஐ.நா. சபை சர்வதேச நாடுகள் ஒத்துழைப்புடன் அமைதிப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்கி, இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் நில ஆக்கிரமிப்பு பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் எல்லைக்கோடு வரைவை இறுதி செய்யாதவரை ஆயுதச் சண்டைகள் முடிவுக்கு வராது.

இஸ்ரேல், காஸாவில் நடைபெற்று வரும் மனிதஉரிமை மீறல்களை சர்வதேச மனிதஉரிமை விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனிதஉரிமை கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

ஐ.நா. மனிதஉரிமை கவுன்சிலில் இடம்பெற்றிருக்கும் இஸ்லாமிய உறுப்பு நாடுகள் சார்பில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் மீதான வாக்கெடுப்பை இந்தியா உள்பட 13 உறுப்பு நாடுகள் புறக்கணித்தன. சீனா, ரஷ்யா, உள்பட 24 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. அதன்மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.நா. மனிதஉரிமை கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கிழக்கு ஜெருசேலம் உள்பட ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதிகள் மற்றும் இஸ்ரேலில் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மதிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்மூலம், இஸ்ரேலுக்கும் காஸாவின் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே அண்மையில் நடைபெற்ற சண்டையின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த நிரந்தர சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.