இந்தியா-ஜெர்மனி இடையே தூதரக உறவு ஏற்பட்டதன் 70-ஆவது ஆண்டு நிகழ்ச்சி ஜூன் மாதம் 2021 நடத்தப்பட்டது. இந்திய-பசிபிக் பிராந்தியத்துக்கான வழிகாட்டு விதிகளை இரண்டாவது ஐரோப்பிய நாடாக ஜெர்மனி கடந்த ஆண்டு வெளியிட்டது. அதை இந்தியா வரவேற்றது.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரத்தை உறுதி செய்யும் தொலைநோக்குத் திட்டத்துடன் இருக்கும் ஜெர்மனியுடன் இணைந்து பணியாற்றுவதை இந்தியா ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறது.

கடந்த 2000-இல் புதிய உத்வேகத்துடன் ஏற்பட்ட இந்தியா-ஜெர்மனி இடையேயான உறவு, வர்த்தகம், முதலீடு, மக்கள் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் மேலும் வலுவடைந்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவியபோது, ஜெர்மனிக்கு ஹைட்ராக்ஸிக்குளோரோகுவின் உள்ளிட்ட மருந்துகளை இந்தியா வழங்கியது. இந்த ஆண்டு கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் இந்தியா தவித்தபோது மருத்துவ உபகரணங்கள், அத்தியாவசிய மருந்துகள், அவற்றைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை வழங்கி ஜெர்மனி உதவிக்கரம் நீட்டியது.

இந்தியா, ஜெர்மனி இடையே அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பு வலுவடைந்துள்ளது. நிகழ்ச்சியில் இந்தியா-ஜெர்மனி இடையே தூதரக உறவு ஏற்பட்டதன் 70-ஆவது ஆண்டின் நினைவாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.