உலகின் சக்கிவாய்ந்த இரு நாடுகளின் தலைவர்களான அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஜூன் 16, 2021 அன்று நடைபெற்றது.

ஏற்கெனவே 2009 முதல் 2017-ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் துணை அதிபராக இருந்த ஜோ பைடன், விளாதிமீர் புதினைச் சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால், அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் புதினை நேரடியாகச் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

பைடனுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் புதின் கூறுகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் என்னுடன் மனித உரிமை விவகாரங்கள் குறித்து பேசினார். ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவல்னி குறித்தும் அவர் விவாதித்தார். அணு ஆயுதங்களை குறைப்பது தொடர்பாக அமெரிக்கா-ரஷ்யா இடையே எஞ்சியுள்ள ஒப்பந்தம் வரும் 2026-ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறது.

அந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இருவரும் தீர்மானித்துள்ளோம். அமெரிக்காவில் இருந்த ரஷ்ய தூதரும், ரஷ்யாவில் இருந்த அமெரிக்க தூதரும் அவரவர் நாடுகளுக்கு திரும்ப அனுப்பப்பட்ட நிலையில், அவர்களை மீண்டும் பணியமர்த்துவதற்கும், இணையவழி பாதுகாப்பு ஆலோசனைகளை தொடங்கவும் இருவரும் ஒப்புக் கொண்டோம். இந்தப் பேச்சுவார்த்தை எந்த விரோதமும் இல்லாமல் ஆக்கப்பூர்வமாக அமைந்தது என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பைடன் கூறுகையில், ’எனது செயல் திட்டம் ரஷ்யாவுக்கு எதிரானது அல்ல எனவும், அமெரிக்க மக்களின் நலன் சார்ந்தது என்றும் புதினிடம் தெளிவுபடுத்தினேன். இருதரப்பு உறவுகள் மேம்படுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. புதினுடன் ஆயுதங்கள் கட்டுப்பாடு, இணையவழி தாக்குதல் குறித்தும் ஆலோசித்தேன். அவற்றுக்கான உள்கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தேன் எனக் கூறினார்.

இந்தப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பதற்றமான தருணங்களிலும் இருதரப்புக்கும் பொதுவான இலக்குகளை எட்டுவதில் இருநாடுகளும் முன்னோக்கிச் செல்ல முடிந்ததை இந்தச் சந்திப்பு எடுத்துக்காட்டியதாக தெரிவிக்கப்பட்டது.