ஜூரோங் ரோவர் (Zhurong Rover)

சீனாவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட ’ஜூரோங் ரோவர் (ஆய்வு வாகனம்) தனது பணியைத் தொடங்கியது. செவ்வாய் கிரகத்தில் நகர்ந்து சென்று ஆய்வுப் பணிகளை அந்த ரோவர் மேற்கொள்ளவுள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு ’தியான் வென்-1 என்ற விண்கலத்தை சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி அனுப்பியது. அந்த விண்கலத்திலிருந்து பிரிந்த லேண்டர் பகுதி செவ்வாய் கிரகத்தின் வட அரைக்கோளத்தில் கடந்த மே மாதம் 15-ஆம் தேதி வெற்றிகரமாகத் தரையிறங்கியது. விண்கலம் தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை சுற்றிவந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

6 சக்கரங்களைக் கொண்ட அந்த ரோவர், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் முப்பரிமாணப் படங்களை பூமிக்கு அனுப்பி வைக்கவுள்ளது. கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்வதோடு நிலப்பகுதிக்கு அடியில் உள்ள அமைப்பு, செவ்வாயின் காந்தப்புலம், நீர், பனிக்கட்டி இருப்பதற்கான ஆதாரங்கள், நில அமைப்பு உள்ளிட்டவை குறித்து ஜூரோங் ரோவர் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிநவீன திறன் கொண்ட புகைப்படக் கருவிகள், நிலத்துக்கு அடியில் ஆய்வு செய்யும் ரேடார் கருவி, நிலப்பரப்பை ஆராயும் கருவி, காந்தப்புல ஆய்வுக் கருவி உள்ளிட்ட கருவிகள் அந்த ரோவரில் இடம்பெற்றுள்ளன.

ஜூரோங் ரோவரானது மணிக்கு 200 மீட்டர் வேகத்தில் நகரும் திறன் கொண்டது. 30 செ.மீ. உயரம் கொண்ட இடங்களையும் ஏறிச்சென்று கடக்கவல்லது. அதிகபட்சமாக 20 டிகிரி சாய்வு கொண்ட இடங்களிலும் அந்த ரோவரால் பயணிக்க முடியும். ரோவரில் இடம்பெற்றுள்ள 6 சக்கரங்களும் தனித்து இயங்கவல்லவை.

பூமியுடன் ஒப்பிடுகையில் செவ்வாயில் குறைந்த அளவே சூரிய ஒளி கிடைக்கம் என்பதால் அதற்கு ஏற்ப ஜூரோங் ரோவரின் சூரிய மின்தகடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சூரியன் இருக்கும் திசைக்கு ஏற்ப அத்தகடுகளும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய ’பெர்சிவரன்ஸ் ரோவர்(Perseverance Rover) செவ்வாய் கிரகத்தில் 3 மாதங்களாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருவது நினைவு கூரத்தக்கது.