தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை முதல்முறையாக அனுப்பி சீனா சாதனை படைத்துள்ளது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியுள்ள அந்த நாடு, இதுவரை இல்லாத வகையில் 380 கி.மீ. தொலைவுக்கு அவர்களை அனுப்பியுள்ளது.

பின்னணி

விண்வெளியில் சீனா அமைத்து வரும் தியான் காங் ஆய்வு நிலையத்தின் பிரதான பகுதியான தியான்ஹே, கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் வீரர்கள் அதில் தங்கியிருப்பதற்குத் தேவையான பொருள்கள், உபகரணங்கள் அடங்கிய சரக்குக் கலமான தியான்ஷோ, கடந்த மே மாதம் செலுத்தப்பட்டு தியான்ஹே கலத்துடன் இணைக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்த ஆய்வு நிலையத்தை நோக்கி 3 வீரர்களுடன் ஷென்ஷோ விண்வெளி ஓடம் கோபி பாலைவனத்தில் அமைந்துள்ள ஜிகுவான் ஏவுதளத்திலிருந்து ஜூன் 17, 2021 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த விண்வெளி ஓடத்தில் நைஹாய்ஷெங்(56), லியூ போமிங்(54), தாங் ஹாங்போ(45), ஆகியோர் இருந்தனர்.

சுமார் 6.5 மணி நேரத்துக்குப் பிறகு ஷென்ஷோ விண்கலம் தியான்ஹே கலத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. அங்கு 3 மாதங்கள் தங்கவிருக்கும் 3 வீரர்களும், தியான்காங் விண்வெளி நிலையத்தைக் கட்டமைக்கும் கடினமான பணியில் ஈடுபடவுள்ளனர்.

அண்மைக் காலமாக விண்வெளி ஆய்வில் சீனா அதிக தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டில் அதிகம் அறியப்படாத நிலவின் தொலைதூரப் பக்கத்தில் தனது சாங்கே-4 ஆய்வுக் கலத்தை முதல்முறையாக சீனா தரையிறக்கியது.

மேலும், சீனாவின்  சாங்கே-5 ஆய்வுக் கலம், நிலவிலிருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு எடுத்து வந்தது.