நாட்டில் உள்ள 2.6 கோடி ஹெக்டேர் சீர்கேடு ஏடைந்த நிலங்களை 2030-ஆம் ஆண்டுக்குள் மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐ.நா. ஒப்பந்தத்தின்(UNCCD) 14-ஆவது மாநாட்டின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். அதன் சிறப்புக் கூட்டம், ஐ.நா. 75-ஆவது பொதுச் சபையின் தலைவர் வோல்கன் போஸ் கிர் அழைப்பு விடுத்ததன் அடிப்படையில் நடைபெற்றது.

பாலைவனமாதல், நிலம் சீர்கெடல், வறட்சி உள்ளிட்டவற்றைத் தடுப்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், நிலம் சீர்கெடல் காரணமாக உலகம் முழுவதும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

நிலத்தை மீட்பதில் கவனம் செலுத்தாமல் போனால், சமூகம், பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், பாதுகாப்பு, வாழ்க்கைத் தரம் உள்ளிட்ட அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகும்.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 30 லட்சம் ஹெக்டேர் வனப்பரப்பு கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாட்டின் ஒட்டுமொத்த பரப்பில் சுமார் கால்பங்கானது வனப்பகுதிகளாக உருவாகியுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தில்லி அறிக்கை, நிலத்தை மீட்டெடுப்பதற்கான முக்கிய வழிமுறைகளை வழங்கியது. நிலம் சீர்கெடலைத் தடுப்பதற்காக சிறப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.