2018 நவம்பர் 30

  1. 2018 செப்டம்பர் 15 அன்று,குவைத்திலுள்ள இந்தியப் பொறியாளர் மையத்தில் 51 ஆவதுபொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார்.  இந்தியாவின் மங்கள்யான் திட்டத்தில் முக்கியப்பங்காற்றிய அவருக்கு செவ்வாய்மனிதன்(Mars Man) எனும் பட்டம் வழங்கப்பட்டது.
  2. FIDE உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டி – 2018 இன் இறுதிச்சுற்று 2018 நவம்பர் 28 அன்று லண்டனில் நடைபெற்றது.  இதில் நார்வேயைச் சார்ந்த மாக்னஸ் கார்ல்ஸன் அமெரிக்காவின் பேபினோ கருணாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.  இவர் ஏற்கனவே 2014,2016, என இருமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  3. 2018 நவம்பர் 29 அன்று, PSLV – C43 இராக்கெட்டின் மூலம் இந்தியாவின் ஹைசிஸ் (HYSIS) செயற்கைக்கோள் உட்பட மொத்தம் 31 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டன. இதில் அமெரிக்கா உள்ளிட்ட 9 வெளிநாடுகளின் 30 செயற்கைக்கோள்களும் அடங்கும்.
  4. நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் வசதியளிக்கும் மத்திய அரசின் சௌபாக்கியா திட்டத்தின் கீழ் மத்தியப்பிரதேசம், திரிபுரா, பீகார், ஜம்மு – காஷ்மீர், மிசோரம், சிக்கிம், தெலுங்கானா, மேற்குவங்கம் ஆகிய 8 மாநிலங்களின் அனைத்து வீடுகளுக்கும் மின்வசதி அளிக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே தமிழகம், கேரளா, ஆந்திரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்கள் 100 சதவிகித மின்வசதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
  5. மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா 2018 நவம்பர் 29 அன்று, அம்மாநில சட்டசபையில் நிறைவேறியது.
  6. ஜமைக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட ரிக்கோ(Reggae) எனும் இசையை யுனெஸ்கோ அமைப்பு, தொட்டுணர முடியாத கலாச்சார பாரம்பரிய சின்னமாக(Intangible Cultural heritage) 2018 நவம்பரில் அங்கீகரித்துள்ளது. புகழ்பெற்ற பாடகரான பாப் மார்லே, இந்த இசை உலகம் முழுவதும் பிரபலமடையக் காரணமாவார்.
  7. காவல்துறை, மருத்துவ உதவி, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு அவசர உதவிகளுக்கு “112” எனும் ஒரே அவசர உதவி எண்ணை 2018 நவம்பர் 29 அன்று இந்தியாவிலேயே முதலாவது மாநிலமாக இமாச்சலப்பிரதேசம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்பொழுது காவல்துறைக்கு 100, தீயணைப்புத்துறைக்கு 101, மருத்துவஉதவிக்கு 108 எனப் பல்வேறு எண்கள் பயன்பாட்டில் உள்ளன.