தமிழக பாடத்திட்ட பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும், ‘ஆதார்’ எண்ணுடன் கூடிய, ‘ஸ்மார்ட்’ அடையாள அட்டை, அடுத்த ஆண்டு வழங்கப்பட உள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி தரத்தை உயர்த்த, பாடத்திட்ட மாற்றம், ஸ்மார்ட் வகுப்பு, ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி என, பல பணிகள் நடந்து வருகின்றன. வரும் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறந்ததும், அனைத்து மாணவர்களுக்கும், ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

அதற்காக, மாணவர்களின் முழு விபரங்களையும் சேகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இறுதியாண்டு தேர்வுக்கு முன், இந்த பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாணவர்களின், ‘ஆதார்’ எண், மொபைல்போன் எண், பெற்றோர் விபரம், முகவரி, ரத்தப் பிரிவு, கற்பிக்கும் மொழி, கல்வி மேலாண் தகவல் அமைப்பான, ‘எமிஸ்’ எண் ஆகியவை, ஸ்மார்ட் அட்டையில் இடம்பெற உள்ளன.
இந்த அட்டையில், சிறிய வகை, ‘சிப்’ பொருத்தவும், அதன் மூலமாக மாணவர்களுக்கு, ‘பயோமெட்ரிக்’ வருகைப் பதிவு மேற்கொள்ளவும், கல்வித்துறை திட்டமிட்டுள்ளது