இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டு வேகமாகப் பரவி வந்த டெல்டா(பி.1.617.2) வகை தீநுண்மி இப்போது டெல்டா-பிளஸ்(ஏஒய்.1) வகையாக உருமாற்றம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புதிய உருமாறிய வகை கொரோனாவின் தாக்கம் இப்போது குறைந்த அளவில் இருப்பதால், இதனால் இந்தியாவில் இப்போதைக்கு ஆபத்தில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தீநுண்மிகளான கப்பா(பி.1.617.1) டெல்டா (பி.1.617.2) ஆகியவற்றின் பரவல் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, டெல்டா வகை உருமாறிய கரோனா தீநுண்மியின் பரவல் அதிக அளவில் காணப்பட்டது என்று மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட 10 தேசிய ஆய்வகங்களை உள்ளடக்கிய ஆய்வுக்குழு தெரிவித்தது.

இந்த அதிக பரவல் வீரியம் கொண்ட டெல்டா வகை தீநுண்மி இப்போது டெல்டா-பிளஸ் வகையாக உருமாற்றம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சார்ஸ்-கொவைட்2 ஸ்பைக் புரதத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த உருமாறிய தீநுண்மி, மனித உடலுக்குள் நுழைந்து திசுக்களை சேதப்படுத்துகின்றன.

லண்டன் சுகாதாரத்துறை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த டெல்டா-பிளஸ் வகை தீநுண்மி கடந்த ஜூன் 7, 2021-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி இந்தியாவில் அதிக அளவில் பரவவில்லை. பெரும்பாலும் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்கா பகுதிகளிலேயே இந்த வகை உருமாற்றம் காணப்படுகிறது.

இந்த டெல்டா-பிளஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அண்மையில் அவசரக் கால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த கேசிரிவிமாப் மற்றும் இம்டெவிமாப் ஆகிய மருந்துகள் நல்ல பலனளிக்கும் என்பதை மருத்துவ ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.