இந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்கள் பழைய முறைப்படியே தேர்வு எழுதலாம் அரசு தேர்வுகள் இயக்குநர் விளக்கம் | இந்த ஆண்டு பிளஸ் 2 செல்லவுள்ள மாணவர்களுக்கு பழைய முறைப்படியே (1200 மதிப்பெண்) பொதுத்தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி விளக்கம் அளித்தார்.

வரும் கல்வி ஆண்டிலிருந்து (2017-18) பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. புதிய தேர்வு முறையின்படி, மேல்நிலைக் கல்வியில் (பிளஸ் 1, பிளஸ் 2) ஒவ்வொரு பாடத்துக்கான மதிப்பெண் 200-ல் இருந்து 100 ஆக குறைக்கப்படுகிறது. அதன்படி, ஒட்டுமொத்த மதிப்பெண் 1200-ல் இருந்து 600 ஆக குறைந்துவிடும்.

பிளஸ் 1 பொதுத்தேர்வு, அதைத் தொடர்ந்து வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆகியவை 600 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். இந்த இரு பொதுத்தேர்வுகளின் மதிப்பெண்களும் பிளஸ் 2 இறுதி தேர்வுக்குப் பிறகு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழாக வழங்கப்படும். பிளஸ் 1 வகுப்புக்கு வரும் கல்வி ஆண்டிலிருந்து பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்படும் நிலையில், இந்த ஆண்டு பிளஸ் 1 முடித்துவிட்டு பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு பழைய நடைமுறையின்படி 1200 மதிப்பெண்ணுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? அல்லது 600 மதிப்பெண்ணுக்கு தேர்வு அமைந்திருக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி கூறியதாவது: இந்த ஆண்டு பிளஸ் 1 முடித்துவிட்டு பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு பழைய நடைமுறையின்படி 1200 மதிப்பெண்ணுக்கு பொதுத்தேர்வு நடைபெறும். இந்த ஆண்டு பிளஸ் 1 சேர்ந்துவிட்டு அடுத்த ஆண்டு பிளஸ் 2 செல்ல இருக்கிற மாணவர்களுக்குத்தான் புதிய தேர்வுமுறையின்படி 600 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறும். அவர்களுக்கு பிளஸ் 1 மதிப்பெண், பிளஸ் 2 மதிப்பெண் (ஒவ்வொன்றுக்கும் தலா 600 மதிப்பெண்) ஆகியவற்றுடன் கூடிய ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு வசுந்தராதேவி கூறினார்.