பள்ளிகளில் மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | பள்ளிகளில் 2 வருடம் மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:- புதிய பாடத்திட்டம் புதிய பாடத்திட்டத்திற் கான வரைவு அடுத்த மாதம் (நவம்பர்) இணையதளத்தில் வெளியிடப்படும். அதன் பிறகு பாடத்திட்டத்தின் மீது கருத்துகளை 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. 500 பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு வினா- விடைகள், வரைபடத்துடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முதலில் 3 ஆயிரம் பள்ளிகளில் ‘ஸ்மார்ட் வகுப்புகள்’ அடுத்த மாதத்துக்குள் தொடங்கப்படும். பள்ளிக்கல்வித் துறையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். மரம் வளர்த்தால் 5 மதிப்பெண் ஒரு மாணவர் 5 மரங்கள் வீதம் 1 கோடி மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டால் 5 கோடி மரங்கள் தயாராகிவிடும். அதனால் நாட்டின் வளமும் பாதுகாக்கப்படும். அவ்வாறு பள்ளிகளில் 2 வருடங்கள் மரங்கள் வளர்த்தால் அந்த மாணவர்களுக்கு 5 மதிப் பெண் வழங்கப்படும். இதுதொடர்பான திட்ட அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.