தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் சி.பாலசுப்பிரமணியன் அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக (பொறுப்பு) ஆக இருந்து வந்தார். இந்த நிலையில் புதிய தலைவராக க.அருள்மொழி என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை அரசு நியமித்தது. இதையொட்டி க.அருள்மொழி டி.என்.பி.எஸ்.சி. தலைவராக பதவி ஏற்றார். பின்னர் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையவழி சேவை அனைத்தும் மிக குறைந்த செலவில் விண்ணப்பதாரர்களுக்கு கிடைக்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தனது இணையவழி விண்ணப்ப சேவையை, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம் மற்றும் 15 மண்டல அலுவலகங்கள் என 280 இடங்களில் நடத்தப்படும் “இ-சேவை மையங்களுக்கு” (பொது சேவை மையங்கள்) வழங்கியுள்ளது. முதல்கட்டமாக, நிரந்தரப்பதிவு செய்தல், தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், விண்ணப்பங்களில் மாறுதல் செய்தல், விண்ணப்பத்தின் நகல் பெறுதல் ஆகிய சேவைகளுக்கு விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய 280 இ-சேவை மையங்களை அணுகலாம். மேற்படி சேவைகளைப் பெற இ-சேவை மையங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் பின்வருமாறு:-
நிரந்தர பதிவு கட்டணம் :
1. நிரந்தர பதிவு செய்ய ரூ.50
2. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரூ.30
3. விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய ரூ.5
4. விண்ணப்பங்களில் மாறுதல் செய்து விண்ணப்பத்தின் நகல் பெற ரூ.20
விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்திற்கு செலுத்த வேண்டிய நிரந்தர பதிவு கட்டணமான ரூபாய் 50 மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தேர்வு கட்டணம் ஆகியவற்றையும் இ-சேவை மையங்களிலேயே செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பணம் செலுத்தியதற்கான ஒப்புகை சீட்டினையும் பெற்றுக்கொள்ளலாம்.
மேற்படி சேவைகள் எல்காட் நிறுவனத்தால் நடத்தப்படும் இ-சேவை மையங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படவுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இந்த சேவையைப் பயன்படுத்தி குறைந்த செலவில் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேர்வுகள் வெளிப்படையாகவும், நம்பகத்தன்மையுடனும் நடத்தப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நண்பனாக செயல்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் முடிவு காலதாமதமாக வராது. காலதாமதத்தை தவிர்க்க அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க நடத்தப்படும் தேர்வுக்கான அறிவிப்பு, குரூப்-4 தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு க.அருள்மொழி தெரிவித்தார்.
பேட்டியின்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மற்றும் அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குனர் குமரகுருபரன் ஆகியோர் இருந்தனர்.