அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பேராசிரியர் தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டதன் பரபரப்பு பின்னணி

Education News

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பேராசிரியர் தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டதன் பரபரப்பு பின்னணி | அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடந்த பேராசிரியர் தேர்வில் ஊழல் நடந்திருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டதில் பரபரப்பு பின்னணி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த 1,058 பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவுகள் கடந்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி வெளியானது. அதில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்பில் மொத்தம் 2,020 பேர் கலந்துகொண்டனர். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றதாக தெரிகிறது. அவர்களில், 220-க்கும் மேற்பட்டவர்களின் சான்றிதழ்களில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தேர்வு பெற்றவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் முறைகேடு நடந்திருப்பதாக அறிந்தனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக தேர்வு வாரிய தலைவர் ஜெகநாதன் அறிவித்தார். இதற்கிடையே, தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்களை இணையதளத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. மதிப்பெண் பட்டியலில் உள்ள மதிப்பெண்ணையும், விடைத்தாளில் உள்ள மதிப்பெண்ணையும் தேர்வு எழுதியவர்கள் ஆய்வு செய்தபோது பலர் அதிர்ச்சி அடைந்தனர். இரண்டிலும் உள்ள மதிப்பெண்களில் பெரிய அளவில் மாறுதல் இருந்தது. சிலருக்கு 60 மதிப்பெண்கள் வரை அதிகமாக கிடைத்திருந்தது. சிலருக்கு 100 மதிப்பெண்கள் வரை குறைவாகி இருந்தது. எனவே, இந்த முறைகேடு குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும், மதிப்பெண் வழங்கியதில் நடந்த குளறுபடிகள் குறித்து தேர்வு எழுதியவர்கள் தபால் மூலமாகவோ, நேரடியாகவோ ஆசிரியர் தேர்வு வாரியத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புகார் பெறப்பட்டதற்கு ரசீதும் வழங்கப்படுகிறது. விடைத்தாள் திருத்தியதில் முறைகேடு நடந்துள்ளதா? அல்லது மதிப்பெண் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதா? என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும். இருந்தாலும், அதிக அளவிலான பணம் லஞ்சம் பெறப்பட்டு, மதிப்பெண் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை போலீசில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை. அதிகாரிகள் மட்டத்திலேயே விசாரணை நடந்து வருகிறது. அதே நேரத்தில், இந்த தேர்வை ரத்து செய்துவிட்டு, புதிதாக மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழத்தொடங்கியுள்ளது.