இந்தியன் வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிகளுக்கு 417 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இது பற்றிய விவரம் வருமாறு:-
பொதுத்துறை வங்கிகளில் ஒன்று இந்தியன் வங்கி. சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கியில் தற்போது புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 417 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 212 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 112 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 62 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 31 இடங்களும் உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முதுநிலை வங்கி மற்றும் நிதிப் பணிகளுக்கான ஓராண்டு டிப்ளமோ பயிற்சி வழங்கப்படும். மணிப்பால் வங்கிப்பணி பயிற்சி கல்லூரியில் இதற்கான டிப்ளமோ பயிற்சி வழங்கப்படுவதுடன் அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்…
விண்ணப்பதாரர்கள் 1-8-2018-ந் தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி
ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்
விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது.
தேர்வு செய்யும் முறை
ஆன்லைன் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். ஆன்லைன் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளாக நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுபவர்கள் தனிநபர் நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்டு பயிற்சியில் சேர்க்கப்படுகிறார்கள். பயிற்சியிலும் தேர்ச்சி பெறுபவர்கள் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த கடைசிநாள் 27-8-2018-ந் தேதி ஆகும்.
முக்கியத் தேதிகள்
ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கிய நாள் 1-8-2018
விண்ணப்பிக்க கடைசி நாள் : 27-8-18
முதல் நிலைத் தேர்வு நடைபெறும் நாள் : 6-10-2018
ஆன்லைன் மெயின் தேர்வு நடைபெறும் நாள் : 4-11-2018
நேர்காணல் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
இது பற்றிய விரிவான விவரங்களை www.indianbank.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.