தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. பட்டங்கள் செல்லும். மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் பதிவாளர் விளக்கம் | தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.விஜயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், தமிழக அரசால் கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மாநிலப் பல்கலைக்கழகம் ஆகும். பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அங்கீகாரத்துடன் தொலைநிலைக் கல்வி முறையிலும், திறந்தநிலைக் கல்வி முறையிலும் டிப்ளமா, இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கி வருகிறது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் படிப்புகளில், 10-ம் வகுப்பு, பிளஸ் 2, மூன்றாண்டு பட்டப் படிப்பு என்ற முறையில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் பட்டங்கள் அரசு வேலைவாய்ப்புக்குச் செல்லத்தக்கவை என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. மேலும், இளங்கலை படிப்புகளில் சேர விரும்புவோர் முறையாக இணைப்பு படிப்பில் (Bridge course) தேர்ச்சி பெற்ற பின்னரே படிக்க இயலும். இந்நிலையில், திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்த பட்டங்கள் செல்லாது என்பதுபோல ஊடகங்களில் சமீபகாலமாக தகவல்கள் வருகின்றன. இது மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் 2003-ல் தொடங்கப்படுவதற்கு முன்பே, பல்வேறு பல்கலைக்கழகங்கள் திறந்தநிலை கல்விமுறையில் அடிப்படை கல்வித்தகுதி ஏதும் இன்றி நேரடியாக முதுகலை படிப்புகளை வழங்கி வந்தன. அதில் சேர்ந்து, பெற்ற படிப்புகள் குறித்துதான் தற்போது சில வழக்கு விவாதங்கள் எழுந்துள்ளன. இதற்கும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக படிப்புகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.